ஒரு வெற்றிகரமான கல்வி நிலையத்தை நடத்துவதற்கு, வகுப்பறைகள் மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் மாணவர்கள் அதிகமான நேரம் அந்த வகுப்பறையில் கழிக்கின்றனர். வகுப்பறை மிகச் சுத்தமாகவும் பிரகாசமாகவும் கெட்ட வாடை எதுவுமில்லாமல், முறையான வெளிச்சம் மற்றும் காற்றுடன் திறந்த நிலையில் இருக்க வேண்டும். வகுப்பறையின் அமைவிடத்தை மிகுந்த கவனமுடன் அமைக்க வேண்டும். அதன் வாயிலாக மாணவர்கள் வகுப்பறையிலும் அதைச் சுற்றிலும் இரைச்சல் எழுப்பாமல், கூட்டமாக முண்டியத்துச் செல்லாமல் இருக்க முடியும். வகுப்பறை ஒரு தூணின் கீழ் அல்லது குளியலறையின் கீழ் அமையக் கூடாது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் தேசத் தலைவர்கள் அல்லது தேசியச் சின்னங்களின் படங்கள் சரியான நிலையில் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஓடும் குதிரைகள், உதிக்கும் சூரியன், சரஸ்வதி படங்கள் அல்லது மாணவர்களின் சாதனைகளைக் குறிக்கும் பரிசுக் கோப்பைகள் ஆகியவை சின்னங்களில் உள்ளடங்கும்.
வகுப்பறை பிரகாசமான நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். தூண்கள், மரச் சாமான்களின் கூர்மையான விளிம்புகள், திறந்த நிலையில் இருக்கும் அலமாரிகள் போன்ற கவனத்தைத் தடுக்கும் பொருள்கள் தவிர்க்கப்பட வேண்டும். படிக்கும் மேசைகள் சுவர்களுக்கு எதிரில் இடம் பெறக் கூடாது.